Monday, March 12, 2012

என் சுவரில் ஆபாசத் தகவல் பதிவிடுகிறார்கள் எனக் கதறுவோரே!

இணையத்தில் உலவுகிறீர்களா? அப்படியெனில் உங்களது பெயர், வயது, பாலினம், வேலை செய்யும் இடம், பிடித்தது, பிடிக்காதது போன்ற சுய விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றி வருகிறீர்கள் என்றுதான் பொருள். இணையத்தை போகிற போக்கில் மேயும், அதிலேயே பல மணிநேரங்களைச் செலவிடும், அங்கேயே குடியிருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு இதுதான் கதி.

 இணையத்தில் யாரும் மறைந்து வாழ முடியாது. எதையாவது செய்துவிட்டு, அது யாருக்கும் தெரியப்போவதில்லை என்று நினைப்பது மாபெரும் அறியாமை. அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒவ்வோர் அசைவும் பதிவு செய்யப்படுகிறது. இப்படி நம்மைக் கண்காணிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது, நம்மைப் பின்தொடர்ந்து நாட்டின் ராணுவ ரகசியங்களையா தெரிந்து கொள்ளப் போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா, அப்படியானால், நீங்கள்தான் அப்பாவி நம்பர் 1.

 பணம் கொடுக்காமல் கிடைக்கிறது என்பதற்காக எதையாவது பயன்படுத்தினால், அங்கு விற்கப்படும் பொருளே நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்பது பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியிருக்கும் அருமையான வாசகம். நடைமுறை வாழ்க்கை, டிஜிட்டல் வாழ்க்கை என இரு வகையான வாழ்க்கையில் மக்கள் அல்லல்பட்டு வரும் இந்த நிலையில் இந்த வாசகம் மிகப் பொருத்தம்.

 இதுவரை இணையச் சேவையில் எதையாவது பணம் கொடுத்து வாங்கியிருக்கிறீர்களா, மின்னஞ்சல் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் கட்டணம் செலுத்தியிருக்கிறீர்களா எனக் கேட்டால், இணையத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் பதில் "ஊகூம்' என்பதாகத்தான் இருக்கும். சினிமா டிக்கெட், சென்ட் பாட்டில், கூலிங் கிளாஸ் போன்றவற்றை வேண்டுமானால் இணையத்தின் மூலம் வாங்கியிருக்கலாம். ஆனால், மின்னஞ்சல், சமூக வலைத் தளம், சாட்டிங்? ஊகூம்தான்.

 வாடிப்பட்டி என்று டைப் செய்தவுடனேயே, அந்த ஊர், எந்த நாட்டில், எந்த மாநிலத்தில் இருக்கிறது, நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலிருந்து அந்த ஊருக்கு எவ்வளவு தொலைவு, எந்தப் பாதையில் செல்ல வேண்டும், அந்த ஊரின் தலைவர் யார், மக்கள் தொகை எவ்வளவு என்பன உள்ளிட்ட எல்லாத் தகவல்களையும் விரல் சொடுக்கும் நேரத்தில் பெற்றுவிட முடிகிறது.

 அந்த ஊரில் குறிப்பிட்ட ஒரு நபரின் வீடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக்கூட கண்டுபிடித்துவிட முடியும். இதற்கெல்லாம் எப்போதாவது பணம் கொடுத்திருக்கிறீர்களா? இதையெல்லாம் இவர்கள் நமக்கு ஏன் இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்கிற கேள்வி எப்போதாவது உதித்திருக்கிறதா? இல்லையென்றால், நீங்கள் நம்பியிருக்கும் நிறுவனங்கள் இதுவரை உங்களைத்தான் விற்று வந்திருக்கின்றன.

 இலவசமாகச் சேவையளிக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இப்போதைய மதிப்பு ரூ.5 லட்சம் கோடி. கடந்த நிதியாண்டின் வருவாய் மட்டும் 20 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது.

 இலவசமாகச் சேவையளிக்கும் ஃபேஸ்புக்காரர்கள், எப்படி இவ்வளவு பணத்தைச் சம்பாதித்தார்கள்? மறைக்காமல் கூறுவதென்றால், நம்மை விற்றுத்தான். அதுசரி, நம்மை ஒரு பொருளாக விற்க முடியுமா என்ன? நிச்சயமாக முடியும்.

 பணம் கொடுப்பவர்கள் மட்டும்தான் வாடிக்கையாளர். சும்மா வந்து போகிறவர்களெல்லாம் வாடிக்கையாளர் அல்லர். பணம் தருவோரிடம் வேறு என்னென்ன பொருள்களையெல்லாம் விற்றுப் பணம் பெற முடியும் என்று நிறுவனங்கள் யோசிப்பது வழக்கம். பணம் தராமல் இலவச சேவைகளை மட்டுமே பயன்படுத்துபவரை என்ன செய்வது? அவர்களையே விற்றுவிட வேண்டியதுதான்.

 அந்த வகையில், தங்களது சேவைகளைப் பயன்படுத்தும் அனைவரின் தகவல்களையும் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் தங்களது தரவுத் தளத்தில் சேகரித்து வைக்கின்றன.

 தகவல்கள் என்றால், அவர் அடிக்கடி என்னென்ன இணையதளங்களைப் பார்வையிடுகிறார், எந்த மாதிரியான தகவல்களை அனுப்புகிறார், எந்த நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்துகிறார் என்பதெல்லாம்தான். இவைதான் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன.

 விளம்பரதாரர்கள் மற்றும் அவர்களுக்கான ஏஜென்சிகளைப் பொருத்தவரை இது மிகவும் மதிப்புமிக்க பொருள். அதனால், எத்தகைய பயனராக இருந்தாலும் அவரது சுயவிவரங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட விலை உண்டு.

 இதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடே இல்லையா என்று கவலைப்பட வேண்டாம். இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும், தங்களது சேவைகளுக்காக "அந்தரங்கக் கொள்கை' என்கிற ஒன்றை வகுத்தளிக்க வேண்டியது கட்டாயம். பயனர்களின் தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது போன்ற விளக்கங்களை அவை கொண்டிருக்கும். ஆனால், இவையெல்லாம் ஒரு அளவுக்குத்தான் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகின்றன.

 இந்த விஷயத்தில், மற்ற நிறுவனங்களைவிட கூகுள் ஒருபடி முன்னேறியிருக்கிறது. தேடுபொறி, மின்னஞ்சல், யூடியூப் என்கிற விடியோ சேவை, அனலிடிக்ஸ் என்னும் இணையதள புள்ளிவிவரங்களை அளிக்கும் சேவை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. இவை அனைத்துக்கும் தனித்தனியே இருந்த அந்தரங்கக் கொள்கைகளை, அண்மையில் பொதுவான ஒரே கொள்கையாக கூகுள் அறிவித்திருக்கிறது.

 இதன்படி, ஒரு சேவையைப் பயன்படுத்துவோரின் அந்தரங்கத் தகவல்கள், பிற சேவையைப் பயன்படுத்தும்போது எதிரொலிக்கும். உதாரணத்துக்கு யூடியூப்பில் ஒரு விடியோவை பார்க்கிறீர்கள் என்றால், கூகுள் தேடலின்போது, அது சம்பந்தமான தகவல்கள் முதன்மைப்படுத்தப்படும் அல்லது விளம்பரமாக வெளியிடப்படும்.

 "கூகுள் டாக்ஸ்' எனப்படும் ஆவணங்களைச் சேமித்து வைக்கப்படும் இடம், நாற்காட்டி, மின்னஞ்சல் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், பயனரின் அனைத்துத் தகவல்களையும் கூகுள் மிக எளிதாகச் சேமித்து வைத்துவிடுகிறது. கூகுள் "டாஸ்போர்டு' என்கிற பகுதியில் நாம் இதுவரை இணையத்தில் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று பார்க்க முடியும். இதை அழிக்க முடியும் என்றாலும், அது எத்தனை பேருக்குத் தெரியும்?

 கடைசியாக ஒன்று, எனது பேஸ்புக் சுவரில் யாரோ தேவையற்ற ஆபாசத் தகவல்களைப் பதிவிடுகிறார்கள் என்று இணையத்தில் உலவும் பலர் கதறுவதைக் கேட்டிருப்போம். அந்த "யாரோ' உருவாக வாய்ப்பளித்தது வேறு யாருமல்ல, சம்பந்தப்பட்ட அப்பாவியேதான்.
.

.
.

Friday, October 28, 2011

உமது மொழியே உலக மொழி!

வாக்காளர் பட்டியலானாலும் ரயில் டிக்கெட் முன்பதிவானாலும் கணினி இல்லாமல் எதுவும் நடக்காது. கணினி இயங்காவிட்டால் பல துறைகள் முடங்கிப் போகும். பொருளாதாரமே வெகுவாகப் பாதிக்கப்படும். அவ்வளவு ஏன், கணினியைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் இணைப்பு சில மணிநேரம் துண்டிக்கப்பட்டால் உலகமே ஸ்தம்பித்துவிடும்.

சாமான்யர்களின் வாழ்க்கையிலும்கூட கணினி ஓர் அங்கமாகிவிட்டது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கணிப்பொறியின் செயல்பாடு அனைத்திலும் "சி' என்கிற கணிப்பொறி நிரல் மொழிக்கு (டழ்ர்ஞ்ழ்ஹம்ம்ண்ய்ஞ் கஹய்ஞ்ன்ஹஞ்ங்) ஒரு முக்கிய இடம் உண்டு.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெரும்பாலானவர்களின் தாய்மொழியே இதுதான். அனேகமாக நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட முதல் கேள்வியும் இந்த மொழியைப் பற்றியதாகவே இருக்கும். உலகின் ஒவ்வொருவரின் வாழ்வையும் கணினி ஆக்கிரமித்திருக்கிறது என்றால், இந்த மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது "சி' மொழிதான்.

இணையத்தில் மேய்பவர்கள் அடிக்கடித் திறக்கும் கூகுள் போன்ற தேடுபொறிகள், மோசில்லா பயர்ஃபாக்ஸ் போன்ற உலவிகள், மைக்ரோசாப்ட் ஆபீஸ், அடோப் போட்டோஷாப் போன்ற பயன்பாடுகள் (அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்ள்) என எல்லா முக்கிய மென்பொருள்கள் அனைத்தும் "சி' மொழியின் மூலமாகவோ அல்லது அதைப் பின்பற்றி வந்த மொழிகள் மூலமாகவோ உருவாக்கப்பட்டவையே. விண்டோஸ் போன்ற இயக்க அமைப்புகள்கூட "சி' மொழியில்தான் முதலில் உருவாக்கப்பட்டன. இப்போதும் "சி' மொழியில் பின்பற்றப்படும் விதிகளையே அவை பின்பற்றுகின்றன.

நோக்கியா ஸ்மார்ட் போன்களில் பயன்படும் சிம்பியன் இயக்க அமைப்பு, கூகுள் தயாரித்து வரும் செல்போன்களுக்கான ஆந்த்ராய்டு இயக்க அமைப்பு, அவற்றுக்கான பயன்பாட்டு மென்பொருள்கள் போன்றவையும் "சி' அல்லது அதைச் சார்ந்த ஜாவா போன்ற மொழிகளிலேயே உருவாக்கப்படுகின்றன.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மொழியை உருவாக்கிய டென்னிஸ் ரிட்சி அண்மையில் மரணமடைந்தார். அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பிரான்க்ஸ்வில்லியில் 1941-ம் ஆண்டில் பிறந்த அவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. முடித்தார். உலகப் புகழ்பெற்ற பல கணினி ஆய்வாளர்களை உருவாக்கிய பெல் லேப்ஸ் (ஆங்ப்ப் கஹக்ஷள்) ஆராய்ச்சி மையத்தில் 1967-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 2007-ம் ஆண்டு ஓய்வுபெறும்வரை அங்கேயே பணியாற்றினார். திருமணமே செய்துகொள்ளவில்லை.

1970-களில் கணினி என்பது பெரிய ஆய்வாளர்கள், அரசு அமைப்புகள் மட்டுமே பயன்படுத்தும் இயந்திரமாக இருந்தது. மென்பொருள்களுக்கு நிரல் எழுதுவது மிகச் சிக்கலான வேலை. ஒரு கணினிக்குப் புரிகிற நிரல் வேறு கணினிக்குப் புரியாது. அதனால் ஒவ்வொரு வகையான கணினிக்கும் வெவ்வேறு வகையான நிரலை எழுதியாக வேண்டும். இதனால் சிறிய பணிகளைச் செய்வதற்குக்கூட நீண்டகாலம் பிடித்தது. சிறிய பணிகளுக்குக்கூட பல்லாயிரக்கணக்கான வரிகளில் நிரல் எழுத வேண்டிய சூழல் இருந்தது. வர்த்தக மென்பொருள்களை உருவாக்குவதற்கு ஒரு மொழியும், அறிவியல் ஆய்வுக்குப் பயன்படும் மென்பொருள்களை உருவாக்க வேறொரு மொழியையும் கற்றாக வேண்டும். ஃபோர்ட்ரான், கோபோல் போன்றவையெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை.

அப்போதுதான் டென்னிஸ் ரிட்சி பெல் லேப்ஸýக்கு வந்தார். ஏற்கெனவே தயாரிப்பில் இருந்த "பி' என்கிற மொழியைக் கையிலெடுத்துக் கொண்டார். மிக எளிமையான, அதிகத் திறன் கொண்ட, கணினித்துறைக்குப் புதிதாக வருவோருக்கும் புரியக்கூடிய வகையிலான புதிய மொழியை உருவாக்கினார். அதுதான் "சி'.

இளைஞரான ரிட்சி, ஆய்வகத்திலும் வீட்டிலும் இரவுபகல் பாராது வேலை செய்துகொண்டே இருப்பார் என்று அவரது நண்பரும் மற்றொரு கணிப்பொறி விஞ்ஞானியுமான கெர்னிகான் குறிப்பிட்டிருக்கிறார். இது நடந்தது 1970-களின் தொடக்கத்தில். "சி' மொழியின் கண்டுபிடிப்பு கணினி உலகத்தின் போக்கையே மாற்றியது.

குழப்பமான வடிவமைப்பைக் கொண்டிருந்த யூனிக்ஸ் இயக்க அமைப்பு (ஞல்ங்ழ்ஹற்ண்ய்ஞ் நஹ்ள்ற்ங்ம்) எளிமையான முறையில் மாற்றியமைக்கப்பட்டது. அதிலும் ரிட்சி முக்கிய பங்கு வகித்தார். அந்த இயக்க அமைப்புதான் நாம் இன்றைக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் லினக்ஸ், விண்டோஸ், மேக் போன்ற எல்லா இயக்க அமைப்புகளுக்கும் முன்னோடி.

ரிட்சி உருவாக்கிய "சி' மொழியின் முக்கியப் பண்பே அதன் எளிமைதான். "சி' மொழியில் எழுதப்பட்ட நிரல்களைப் புதியவர்கள்கூட எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இன்றைக்கு தமிழகப் பள்ளிக்கூடங்களிலேயே இந்த மொழி பாடமாக இருக்கிறது. தமிழ்மொழியின் மூலமாக இதை நமது மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் பூலியன்களைக் (0,1) கொண்டு இயங்கும் மிகச் சிக்கலான பொறி மொழிகளைப் புரிந்து கொள்வோர் மட்டுமே கணினி நிரல்களை எழுத முடிந்தது. அதை மாற்றி மிகச் சாமான்யர்கள்கூட மிகப் பிரம்மாண்டமான, சிக்கலான, ஆழமான நிரல்களை உருவாக்க முடிகிறதென்றால் அதற்கு டென்னிஸ் ரிட்சிதான் காரணம்.

இன்றைய மைக்ரோசாப்ட், ஆரக்கிள், ஆப்பிள், கூகுள் போன்ற எல்லா பிரபல நிறுவனங்களும் ரிட்சி உருவாக்கிய தொழில்நுட்பத்தின் மீதேறி சவாரி செய்பவையே. தமது கண்டுபிடிப்புகளின் மூலம் இன்னும் நூறாண்டுகளுக்கு வாழப் போகிறார் என்பதாலோ என்னவோ ஸ்டீவ் ஜாப்ஸின் மரணத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்கூட ரிட்சியின் மரணத்துக்குத் தரப்படவில்லை!

Monday, October 4, 2010

மொபைல் போனில் தமிழ் யூனிகோட்

பெரும்பாலான மொபைல் போன்களில் தற்போது இணையத்தில் உலவுவதற்கு ஆப்பரா மினி உலவியே பயன்படுகிறது. ஆப்பராவின் வேகம் ஒப்பீட்டளவில் அதிகமானது. இதுபோக பேண்ட்விட்த் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுவதால், செலவும் மிச்சமாகிறது. இதனால்தான் இந்த உலவியை அதிகம்பேர் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் ஆப்பராவில் யூனிகோட் தமிழ் இணையதளங்களைப் பார்வையிடுவதில் பெரும்பாலானவர்களுக்குப் பிரச்னை இருக்கிறது. அதற்கான தீர்வுதான் இங்கே தரப்படுகிறது.

    * ஆப்பரா உலவியை இயக்கவும்
    * முகவரிப் பட்டையில் config: என டைப் செய்து உள்ளிடவும்
    * இணைய இணைப்புப் பெற்று ஒரு செட்டிங் பட்டியல் தோன்றும்
    * அதில் use bitmap fonts என்கிற விருப்பத்தில் yes எனத் தேர்வு செய்யவும்.


அவ்வளவுதான்...

இப்போது ஆப்பரா மினியில் தமிழ் இணையத் தளங்களைப் பார்வையிடலாம். ஆனால் கொஞ்சம் வேகம் குறைவாக இருக்கும்.

சிம்பியன், ஆந்த்ராய்டு என எந்த வகையான இயக்க அமைப்புள்ள போன்களுக்கும் இது பொருந்தும்.
. .

Saturday, October 2, 2010

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

இன்றைய நிலவரப்படி புதிய செல்போன் வாங்க நினைப்பவர்கள் முதலில் கேட்கும் கேள்வி, 3 ஜி வசதி இருக்கிறதா என்பதுதான். அத்துடன் ஜிபிஎஸ், வைஃபை, க்வெர்டி கீபோர்டு போன்ற தொழில்நுட்பங்களும் கிடைக்குமா என்று ஆசைப்படத் தொடங்கிவிட்டனர். ஆனால் விலையைக் கேட்டபிறகு பாதிபேர் பின்வாங்கிவிடுகின்றனர்.  நோக்கியாவின் 2 புதிய வெளியீடுகள் இந்த நிலைமையை மாற்றியிருக்கின்றன. அதில் ஒன்று C5 மற்றொன்று E5.
Nokia C5


3ஜியின் முக்கிய வசதியே இணையப் பயன்பாடுதான். சி5 மற்றும் இ5 ஆகிய இரண்டு மாடல்களும் 10.2 எம்பிபிஎஸ் வேகம் வரை இணையத் தொடர்பை அளிக்கின்றன. சேவை அளிப்பவர்கள் அந்த வேகத்தில் இணைப்பை வழங்க வேண்டும் அவ்வளவுதான்.  சி5ல் வைஃபை வசதி கிடையாது. இ5-ல் இந்த வசதி இருக்கிறது.


இதில் சி5 மிகவும் எளிமையான வழக்கமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இ5 மிகவும் நவீனமான க்வெர்டி கீபோர்டு வசதியுடன் வந்திருக்கிறது. இதில் இ5-ல் விடியோ கால் கேமரா கிடையாது. ஆனால், வேறுபல வசதிகள் இ5-ல் அளிக்கப்பட்டிருக்கின்றன.
Nokia E5
சி5-ல் 128 எம்பி ராம் மெமரியும் இ5-ல் 256 எம்பி ராம் மெமரியும் உள்ளன. இந்த வசதியால் இந்த இரு போன்களுமே மிக வேகமாகச் செயல்படுகின்றன. அதேபோல் சி5-ல் 50 எம்பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் இ5-ல் 250 எம்.பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் உள்ளன. கூடுதலாக 2 ஜிபி மெமரி கார்டு வழங்கப்படுகிறது. சி5யில் 3.2 மெகாபிக்சல் கேமராவும் இ5-ல் 5 மெகாபிக்சல் கேமராவும் உள்ளன.


சி5 ஸ்கீரின் 16 மில்லியன் வண்ணத்திறனும் இ5 ஸ்கிரீன் 256கே வண்ணத்திறனும் கொண்டிருக்கின்றன. இ5-ல் குறைந்த வண்ணத்திறன இருப்பதால் பெரிதாக வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை.


இரு போன்களிலுமே ஜிபிஎஸ் வசதி இருக்கிறது. ஏபிஜிபிஎஸ் சேவையும் கிடைக்கும். நீங்கள் இருக்கும் இடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வகை செய்யும் கூகுள் லாட்டிட்யூட் சேவை இரு போன்களிலுமே மிக அருமையாகச் செயல்படுகிறது.


செல்லும் இடங்களிலெல்லாம் இணைத்தை மேய நினைப்போருக்கு இ5 போனும், விடியோ கால் வசதி கண்டிப்பாக வேண்டும் என நினைப்போருக்கு சி5 போனும் சிறந்தது.


விலை : சி5 - ரூ. 7500, இ5 - ஏறக்குறைய ரூ.10 ஆயிரம்.


.........
...