Friday, October 28, 2011

உமது மொழியே உலக மொழி!

வாக்காளர் பட்டியலானாலும் ரயில் டிக்கெட் முன்பதிவானாலும் கணினி இல்லாமல் எதுவும் நடக்காது. கணினி இயங்காவிட்டால் பல துறைகள் முடங்கிப் போகும். பொருளாதாரமே வெகுவாகப் பாதிக்கப்படும். அவ்வளவு ஏன், கணினியைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் இணைப்பு சில மணிநேரம் துண்டிக்கப்பட்டால் உலகமே ஸ்தம்பித்துவிடும்.

சாமான்யர்களின் வாழ்க்கையிலும்கூட கணினி ஓர் அங்கமாகிவிட்டது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கணிப்பொறியின் செயல்பாடு அனைத்திலும் "சி' என்கிற கணிப்பொறி நிரல் மொழிக்கு (டழ்ர்ஞ்ழ்ஹம்ம்ண்ய்ஞ் கஹய்ஞ்ன்ஹஞ்ங்) ஒரு முக்கிய இடம் உண்டு.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெரும்பாலானவர்களின் தாய்மொழியே இதுதான். அனேகமாக நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட முதல் கேள்வியும் இந்த மொழியைப் பற்றியதாகவே இருக்கும். உலகின் ஒவ்வொருவரின் வாழ்வையும் கணினி ஆக்கிரமித்திருக்கிறது என்றால், இந்த மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது "சி' மொழிதான்.

இணையத்தில் மேய்பவர்கள் அடிக்கடித் திறக்கும் கூகுள் போன்ற தேடுபொறிகள், மோசில்லா பயர்ஃபாக்ஸ் போன்ற உலவிகள், மைக்ரோசாப்ட் ஆபீஸ், அடோப் போட்டோஷாப் போன்ற பயன்பாடுகள் (அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்ள்) என எல்லா முக்கிய மென்பொருள்கள் அனைத்தும் "சி' மொழியின் மூலமாகவோ அல்லது அதைப் பின்பற்றி வந்த மொழிகள் மூலமாகவோ உருவாக்கப்பட்டவையே. விண்டோஸ் போன்ற இயக்க அமைப்புகள்கூட "சி' மொழியில்தான் முதலில் உருவாக்கப்பட்டன. இப்போதும் "சி' மொழியில் பின்பற்றப்படும் விதிகளையே அவை பின்பற்றுகின்றன.

நோக்கியா ஸ்மார்ட் போன்களில் பயன்படும் சிம்பியன் இயக்க அமைப்பு, கூகுள் தயாரித்து வரும் செல்போன்களுக்கான ஆந்த்ராய்டு இயக்க அமைப்பு, அவற்றுக்கான பயன்பாட்டு மென்பொருள்கள் போன்றவையும் "சி' அல்லது அதைச் சார்ந்த ஜாவா போன்ற மொழிகளிலேயே உருவாக்கப்படுகின்றன.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மொழியை உருவாக்கிய டென்னிஸ் ரிட்சி அண்மையில் மரணமடைந்தார். அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பிரான்க்ஸ்வில்லியில் 1941-ம் ஆண்டில் பிறந்த அவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. முடித்தார். உலகப் புகழ்பெற்ற பல கணினி ஆய்வாளர்களை உருவாக்கிய பெல் லேப்ஸ் (ஆங்ப்ப் கஹக்ஷள்) ஆராய்ச்சி மையத்தில் 1967-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 2007-ம் ஆண்டு ஓய்வுபெறும்வரை அங்கேயே பணியாற்றினார். திருமணமே செய்துகொள்ளவில்லை.

1970-களில் கணினி என்பது பெரிய ஆய்வாளர்கள், அரசு அமைப்புகள் மட்டுமே பயன்படுத்தும் இயந்திரமாக இருந்தது. மென்பொருள்களுக்கு நிரல் எழுதுவது மிகச் சிக்கலான வேலை. ஒரு கணினிக்குப் புரிகிற நிரல் வேறு கணினிக்குப் புரியாது. அதனால் ஒவ்வொரு வகையான கணினிக்கும் வெவ்வேறு வகையான நிரலை எழுதியாக வேண்டும். இதனால் சிறிய பணிகளைச் செய்வதற்குக்கூட நீண்டகாலம் பிடித்தது. சிறிய பணிகளுக்குக்கூட பல்லாயிரக்கணக்கான வரிகளில் நிரல் எழுத வேண்டிய சூழல் இருந்தது. வர்த்தக மென்பொருள்களை உருவாக்குவதற்கு ஒரு மொழியும், அறிவியல் ஆய்வுக்குப் பயன்படும் மென்பொருள்களை உருவாக்க வேறொரு மொழியையும் கற்றாக வேண்டும். ஃபோர்ட்ரான், கோபோல் போன்றவையெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை.

அப்போதுதான் டென்னிஸ் ரிட்சி பெல் லேப்ஸýக்கு வந்தார். ஏற்கெனவே தயாரிப்பில் இருந்த "பி' என்கிற மொழியைக் கையிலெடுத்துக் கொண்டார். மிக எளிமையான, அதிகத் திறன் கொண்ட, கணினித்துறைக்குப் புதிதாக வருவோருக்கும் புரியக்கூடிய வகையிலான புதிய மொழியை உருவாக்கினார். அதுதான் "சி'.

இளைஞரான ரிட்சி, ஆய்வகத்திலும் வீட்டிலும் இரவுபகல் பாராது வேலை செய்துகொண்டே இருப்பார் என்று அவரது நண்பரும் மற்றொரு கணிப்பொறி விஞ்ஞானியுமான கெர்னிகான் குறிப்பிட்டிருக்கிறார். இது நடந்தது 1970-களின் தொடக்கத்தில். "சி' மொழியின் கண்டுபிடிப்பு கணினி உலகத்தின் போக்கையே மாற்றியது.

குழப்பமான வடிவமைப்பைக் கொண்டிருந்த யூனிக்ஸ் இயக்க அமைப்பு (ஞல்ங்ழ்ஹற்ண்ய்ஞ் நஹ்ள்ற்ங்ம்) எளிமையான முறையில் மாற்றியமைக்கப்பட்டது. அதிலும் ரிட்சி முக்கிய பங்கு வகித்தார். அந்த இயக்க அமைப்புதான் நாம் இன்றைக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் லினக்ஸ், விண்டோஸ், மேக் போன்ற எல்லா இயக்க அமைப்புகளுக்கும் முன்னோடி.

ரிட்சி உருவாக்கிய "சி' மொழியின் முக்கியப் பண்பே அதன் எளிமைதான். "சி' மொழியில் எழுதப்பட்ட நிரல்களைப் புதியவர்கள்கூட எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இன்றைக்கு தமிழகப் பள்ளிக்கூடங்களிலேயே இந்த மொழி பாடமாக இருக்கிறது. தமிழ்மொழியின் மூலமாக இதை நமது மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் பூலியன்களைக் (0,1) கொண்டு இயங்கும் மிகச் சிக்கலான பொறி மொழிகளைப் புரிந்து கொள்வோர் மட்டுமே கணினி நிரல்களை எழுத முடிந்தது. அதை மாற்றி மிகச் சாமான்யர்கள்கூட மிகப் பிரம்மாண்டமான, சிக்கலான, ஆழமான நிரல்களை உருவாக்க முடிகிறதென்றால் அதற்கு டென்னிஸ் ரிட்சிதான் காரணம்.

இன்றைய மைக்ரோசாப்ட், ஆரக்கிள், ஆப்பிள், கூகுள் போன்ற எல்லா பிரபல நிறுவனங்களும் ரிட்சி உருவாக்கிய தொழில்நுட்பத்தின் மீதேறி சவாரி செய்பவையே. தமது கண்டுபிடிப்புகளின் மூலம் இன்னும் நூறாண்டுகளுக்கு வாழப் போகிறார் என்பதாலோ என்னவோ ஸ்டீவ் ஜாப்ஸின் மரணத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்கூட ரிட்சியின் மரணத்துக்குத் தரப்படவில்லை!

1 comment:

murugan said...

மிகவும் அருமையான பதிவு. முதல் postலேயே சூப்பரான பதிவு.தொடர்ந்து எழுதவும்.